

சேலம்
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் வழியாக சென்னைக்கு 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கோவில்கள், இடிக்கப்பட உள்ளதால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.
8 வழி சாலைக்கான நிலத்தை அளவீடு செய்து கல் அமைக்கும் பணி கடந்த 18-ந்தேதி தொடங்கியது.
சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் 6-வது நாளாக இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 70 மீட்டர் அகலத்தில் நில அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் பசுமை சாலைக்கு நிலம் வழங்கிய ஷோபனா, பூங்கொடி, மணி மேகலை ஆகிய 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார்.
இதற்காக கையகப்படுத்தப்படும் நிலம் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு குறித்து சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் சந்தை மதிப்பை விட 2 முதல் 4 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரேகினி அறிவித்துள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு குறைந்தபட்சம் 21 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக, 9 கேடியே 4 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 500 சதுர அடி காங்கிரீட் வீட்டுக்கு 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது. மாட்டு கெட்டகைக்கு 25 ஆயிரம் ரூபாயும், தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும், மாமரத்திற்கு 30, ஆயிரம் ரூபாயும், கெய்யா மரத்திற்கு 4 ஆயிரத்து 200 ரூபாயும், நெல்லிக்காய் மரத்திற்கு 4 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
இதேபேல் பலா மரத்திற்கு 9 ஆயிரத்து 600 ரூபாயும், புளிய மரத்திற்கு 9 ஆயிரத்து 375 ரூபாயும், பனை மரத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படவுள்ளது. திருவண்ணமாலை மாவட்டத்தில் சந்தை மதிப்பைவிட 1 புள்ளி 27 மடங்கு அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது.
பம்பு செட் கிணறுக்கு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், கிணறுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், தென்னை மரத்திற்கு 80 ஆயிரம் ரூபாயும், பனை மரத்திற்கு 2 ஆயிரம் ரூபாயும், வாழை மரத்திற்கு ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.