

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் ஊராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட கீழபாண்டவர்மங்கலம் ராமலட்சுமி நகர் தெற்கு பகுதியில் குறைந்த அழுத்தத்தில் மின் வினியோகம் செய்யப்படுவதை கண்டித்தும், சீரான மின்வினியோகம் செய்ய வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் நேற்று மின் வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட உதவி செயலாளர் ஜி.பாபு தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் அ.சரோஜா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.சேதுராமலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பரமராஜ், நகர உதவிச் செயலாளர் ஜி.அலாவுதீன், வழக்கறிஞர் அ. ரஞ்சனி கண்ணம்மா மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் உதவி மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) தங்கராஜ், உதவி பொறியாளர் லட்சுமிபிரியாவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு விரைந்து சரி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.