முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

கடலூர்,

புயல், மழையால் பாதிக்கப்பட்ட கடலூரில் நேற்று முன்தினம் சேதங்களை பார்வையிட்ட மத்திய குழு அதிகாரிகள் நேற்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்புக்கு பிறகு கடலூர் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல், மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டார். மழை வெள்ளம் மூழ்கடித்த வயலில் இறங்கி பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விவசாயிகள் அழுகிய நெற்பயிரை காண்பித்தனர். அந்த பயிரை வாங்கி அவர் ஆய்வு செய்தார்.

வீராணம் ஏரிக்கு சென்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் வீராணம் ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு?, எத்தனை ஏக்கர் பாசனம் பெறுகிறது?, சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு எவ்வளவு கனஅடி நீர் அனுப்பப்படுகிறது? என்பது குறித்து கலெக்டரிடம் கேட்டு தெரிந்து கொண்டார். தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நிவர், புரெவி ஆகிய 2 புயலால் கடலூர் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முழுமையாக கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை கிடைத்ததும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

புயல், வெள்ள பாதிப்புக்கு போதிய நிதி தருமாறு மத்திய அரசிடம் கேட்டோம். மத்திய அரசும் உடனடியாக பாதிப்பை பார்வையிட குழுவை அனுப்பி வைத்தது. புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை என்பது தவறு. நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக கடலூர் ஆணையம் பேட்டை கிராமத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ள சேதங்களை பார்வையிட்ட போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. இதை பார்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலையோரத்தில் ஒதுங்கி நின்றார். தன்னுடன் வந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுமாறு கூறினார். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் வாகனம், சிரமமின்றி சென்றது.

இதேபோல புதுச்சத்திரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, முதல்-அமைச்சரின் காருக்கு முன்னும், பின்னும் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. அப்போது எதிரே ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிரைவரிடம் காரை சாலையோரமாக நிறுத்துமாறு கூறியதுடன், பாதுகாப்பு போலீசார் மூலம் ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com