தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடக்கோரிய வழக்கு தள்ளுபடி

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை முழுமையாக பாடக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பில், ‘தமிழகத்தில் அமைதியை குலைக்க விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடக்கோரிய வழக்கு தள்ளுபடி
Published on

சென்னை,

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ராமபூபதி. ஆட்டோ டிரைவர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் கூறியிருந்ததாவது:-

எனது தந்தை ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர். இதனால், தமிழ்மொழி மீது எனக்கு அதிக பற்றுதல் உண்டு. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார் ஆவார். அவர் எழுதிய முழுமையான பாடலில் இருந்து பல பகுதிகள் நீக்கப்பட்ட பிறகே, தற்போது பாடப்பட்டு வரும் பாடல் 1968-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாடலை திருத்துவது, மாற்றியமைப்பது என்பது தமிழ் மொழி கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பள்ளிகள் மற்றும் அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தற்போது பாடப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் கடந்த 50 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறது. இந்த பாடலை அனைவரும் ஏற்றுக்கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றனர். அப்படி இருக்கும்போது மறுபடியும் முன்பு இருந்த பாடலை கொண்டு வந்தால் அதற்கு எதிராக சிலர் போராடுவார்கள்.

இதனால் பிரச்சினை ஏற்படும். எனவே, இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது. தமிழகம் தற்போது அமைதியாக உள்ளது. இந்த அமைதியை குலைக்க நாங்கள் (நீதிபதிகள்) விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com