

குடியாத்தம்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக குடியாத்தத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
பேட்டி
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் குமரவேல் பாண்டியன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது-
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு நோயாளியிடமும் சிகிச்சைகள் குறித்து கேட்கப்பட்டது மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்குமாறு மருத்துவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம் கேட்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர்.வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட வேண்டும். முககவசம் அணிந்த பின்னே அனுமதிக்க வேண்டும் மேலும் முக கவசம் அணிவதை குடியாத்தம் உதவி கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.
11 பேருக்கு தொற்று
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் இதுவரை 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 8 பேர் வீட்டில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர் 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களுக்கு குறைந்த அளவு பாதிப்பு உள்ளது மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடப்பட்டுள்ளது. 12 வயது முதல் 18 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசிகள் போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தடுப்பூசி பெற்றோர்களின் அனுமதியோடு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
பணம் வாங்கியதாக கூறப்பட்ட ஊழியரை எச்சரித்த கலெக்டர்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தபோது நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது நோயாளிகள் சில குறைபாடுகளை கூறினார்கள். மேலும் பணம் கேட்பதாக ஒரு ஊழியர் மீது நோயாளிகள் புகார் அளித்தனர். கலெக்டர் அந்த ஊழியரை அழைத்து எச்சரித்தார் தொடர்ந்து மருத்துவமனை கழிவறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், தாசில்தார் லலிதா, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், டாக்டர் ஹேமலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.