

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தாலும், கடந்த மாத இறுதியில் தீவிரமாக பரவத்தொடங்கியது. மார்ச் 31-ந் தேதி முதல் ஏப்ரல் 13-ந்தேதி வரையிலான 2 வாரங்களில் ஒரே ஒரு நாளை தவிர மீதமுள்ள 13 நாட்களும் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-க்கும் கூடுதலாகவே இருந்தது.
அந்த கால கட்டத்தில் 2 நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது. மார்ச் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இந்த எண்ணிக்கை 50-க்கும் கீழ் குறைந்தது ஓரளவு நிம்மதியளித்தாலும் கூட, அதற்கு பிறகு இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வராதது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதற்கு காரணம் தமிழக மக்களின் அலட்சியம், அலட்சியம், அலட்சியம் தான். ஊரடங்கு என்றால் என்ன என்பதன் பொருளை நமது மக்கள் உணராமல் ஊர் சுற்றி வருவது தான் நோய்பரவலுக்கு முக்கிய காரணம் ஆகும்.
இனியும் அலட்சியம் காட்டாமல் ஊரடங்கை தீவிரமாக கடைபிடித்து, கொரோனாவை விரட்ட தமிழக மக்கள் ஒத்துழைக்கவேண்டும். அதேபோல் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்தும் பணியில் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறையினர், இனிவரும் காலங்களில் இன்னும் கூடுதலாக இரட்டிப்பு கண்டிப்புடன் செயல்படவேண்டும். அதன் மூலம் தான் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.