ஊரடங்கு கால மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி 21-ந்தேதி வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் - மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு கால மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி தமிழகத்தில் 21-ந்தேதி வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊரடங்கு கால மின்சார கட்டணத்தை குறைக்கக்கோரி 21-ந்தேதி வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காணொலிக்காட்சி மூலமாக நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

* கொரோனா நோய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக பரவி வருகிறது. எனவே மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வழங்கியுள்ள ஆலோசனைகளையும், தற்போது மருத்துவம், பொருளாதாரம், தொழில் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழங்கி வரும் ஆலோசனைகளையும் அ.தி.மு.க. அரசு உடனடியாக ஆழ்ந்து பரிசீலனை செய்து, நிறைவேற்றி உள் தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா நோயை தடுத்திடவும், மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 100 நாட்களுக்கு முன்பே, கொரோனா 3 நாட்களில் பூஜ்யமாகிவிடும் என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்து நாட்களில் கொரோனா பரவல் குறைந்துவிடும் என்று 2-வது முறை நம்பிக்கை தெரிவித்து, ஆரூடம் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

* உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்திடவேண்டும். இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவ கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திடவேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க. அரசை இந்த கூட்டம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

* செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவேண்டும். பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும் என்று உடனடியாக அவசர சட்டம் கொண்டுவந்து அ.தி.மு.க. அரசு நிறைவேற்றவேண்டும்.

* தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலையில் குற்றம் புரிந்தவர்களும், அந்த குற்றத்தை திரையிட்டு மறைக்க காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, தாமதம் இல்லாமல் தக்க தண்டனை வழங்கப்பட்டு, நீதி, நியாயம், நேர்மை காப்பாற்றப்படவேண்டும்.

* விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய நியமன அதிகாரம் உள்ளிட்ட மாநில அதிகாரங்களை பறிக்கும் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ உடனடியாக திரும்பப்பெறவேண்டும். எந்த காரணம் கொண்டும், எந்த நிலையிலும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பலி பீடத்தில் ஏற்றிவிடக்கூடாது.

* தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. கொரோனா பேரிடர் வாழ்வாதார இழப்பில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை மீட்டிட ஏற்கனவே வழங்கியுள்ள அனைத்து நகை கடன்கள் மற்றும் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.

* செமஸ்டர் தேர்வுகளை நடத்தவேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப்பெறவேண்டும். பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட மற்ற ஆண்டுகளுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ஆபத்தான கொரோனா பேரிடர் அசாதாரண காலம் கருதி ரத்து செய்து மாணவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவேண்டும்.

* ஜனநாயகத்தை போற்றி, மக்கள் பிரதிநிதிகளை மதித்து தி.மு.க. சார்ந்த ஊராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை புறக்கணிக்கும் எண்ணத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். அதேவேளையில் அ.தி.மு.க. அரசு திருந்தி நியாயமான வழி தேட தவறினால், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும்.

* திருப்போரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க.வின் நற்பெயரை கெடுக்க காவல்துறையை பயன்படுத்தியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும்.

* தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிக மின்கட்டணத்தை, எல்லா தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத்தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இந்த கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. அ.தி.மு.க. அரசின் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ரீடிங் எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்க கோரியும், குறிப்பாக முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்த தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படி குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாத தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வருகிற 21-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பி போராடுவது என்று இந்த கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com