திமுக கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

திமுக கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
Published on

சென்னை,

திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக நிர்வாகிகள் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை சந்தித்து பேசினர்.

இதனையடுத்து இன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்குபெறும் கிராம சபை கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில், கிராம சபை என்ற பெயரில் கூட்டம் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தனி நபர்களுக்காகவோ அல்லது அரசியல் கட்சிகளின் ஆதாயத்திற்காகவோ கிராம சபை கூட்டங்களை நடத்தக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தானுக்கு காவல்துறை ஆய்வாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நடத்தும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தேவைகளான குடிநீர், சுகாதாரம், சாலைப் பணிகள் ஆகியவை தொடர்பான கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

திமுக முன்னின்று நடத்தும் கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்து வருவதை பொறுக்க முடியாமல் தமிழக அரசு தடை செய்துள்ளது. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com