பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்பு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்பு திட்டத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பள்ளி மாணவர்களுக்கான பல் பாதுகாப்பு திட்டம்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Published on

சென்னை,

பள்ளி குழந்தைகளை பரிசோதித்து அவர்களுக்கு ஏற்படும் வாய்வழி நோய்கள், பல் சொத்தை, ஈறு பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தீர்வு காண்பதற்கும் 'புன்னகை' என்ற பெயரில் தமிழக அரசால் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற உள்ளனர்.

இந்த புதிய திட்டத்தின் தொடக்க விழா சென்னை, நந்தனம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நடமாடும் வாகனம்

பின்னர், நடமாடும் பல் மருத்துவ வாகனத்தில் அளிக்கப்படும் பல் சிகிச்சையை பார்வையிட்டு, புகையிலை ஒழிப்பு கையெழுத்து பிரசார பலகையில் கையெழுத்திட்டனர்.

இதன்பின்பு மாணவர்களின் குறுந்தகடுகளை வெளியிட்டனர்.

விழா முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய அளவில் 5 முதல் 15 வயது வரையிலான 50 முதல் 60 சதவீதம் குழந்தைகளுக்கு பல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. பல் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த புதிய திட்டம் உதவியாக இருக்கும்.

4 லட்சம் பேர் பயன்

நடமாடும் பல் மருத்துவ வாகனத்தின் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 4 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மயிலை வேலு எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக்கல்வி இயக்குனர் சாந்திமலர், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com