திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணி
Published on

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக மெகா மம்பாட்டு திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. அத்துடன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது.

இதையொட்டி திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பேட்டி

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

இதுவரையில் வடமாநிலங்களில் மட்டுமே சுமார் ரூ.150 கோடி அளவிலான திருக்கோவில் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் திருச்செந்தூர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் மெகா திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. இதில் எச்.சி.எல். நிறுவனம் ரூ.200 கோடியும், கோவில் மற்றும் உபயதாரர் நிதி ரூ.100 கோடி மூலமும் இப்பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பணியை வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதுதொடர்பாக கோவில் வளாகத்தில் ஆய்வு செய்துள்ளோம்.

கும்பாபிஷேக பணி

மேலும் திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்து தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கும்பாபிஷேக பணிகளும் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளி பக்தர்களும் கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் சாமி தரிசனத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com