சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்.!

கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டு உள்ளது.
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த சர்ச்சை பதாகை அகற்றம்.!
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே, 4 தினங்களுக்கு பக்தர்கள் யாரும் கோயிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் தீட்சர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், அங்கிருந்த பக்தர்கள் கனகசபை மேல் ஏறக்கூடாது என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில், சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என தீட்சிதர்கள் வைத்த பதாகை தற்போது அகற்றப்பட்டு உள்ளது. போலீசார் உடன் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து பதாகையை அகற்றினர்.

பதாகையை அகற்ற தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com