தி.மு.க. கூட்டணி தேர்தல் வரை நீடிக்காது: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு

தி.மு.க. கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை, தேர்தல் வரை நீடிக்காது, அது தானாகவே உடைந்து விடும் என பொள்ளாச்சியில் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பொள்ளாச்சி,
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் 140-வது தொகுதியாக தொண்டாமுத்தூரிலும், 141-வது தொகுதியாக கிணத்துக்கடவிலும் பிரசாரம் செய்தார். நேற்று பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போது பேசினாலும், தி.மு.க. தலைமையில் கூட்டணி பலமாக உள்ளது என்று கூறுகிறார். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி மக்களை நம்பி உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஒரே கொள்கை கொண்டது என்று கூறுகிறார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. ஒரே கொள்கை என்றால், உங்கள் கூட்டணி கட்சிகள் ஏன் தனித்தனியாக உள்ளது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கை நிலையானது. கூட்டணி, தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. இது அதி.மு.க.வின் நிலைப்பாடு.
கூட்டணி கட்சிகளை ஏமாற்றி அந்த கட்சிகளை விழுங்கிக்கொண்டு இருக்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. கூட்டணி கட்சிகளே, உஷாராக இருந்தால் உங்கள் கட்சிகளை காப்பாற்ற முடியும். நாங்கள் கூட்டணியை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே உடைந்து போய்விடுவீர்கள். கம்யூனிஸ்டு கட்சியினர் அப்படிதான் பேசுகிறார்கள். 98 சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றியதாக தி.மு.க.வினர் தெரிவித்தனர். இதுகுறித்து கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடம் கேட்டபோது, இது ஏதோ தவறான கணக்காக இருக்கிறது என்று கூறுகின்றனர். அப்படி என்றால் கூட்டணியில் முரண்பட்ட கருத்து உள்ளது. தேர்தல் வரை தி.மு.க. கூட்டணி நீடிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.






