பாரபட்சமின்றி செயல்படுகிறோம்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

திரைப்படத்துறை விருது வழங்கலில் பாரபட்சமின்றி செயல்படுகிறோம் என்றும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாரித்த படங்களுக்கும் விருதுகள் வழங்கியிருக்கிறோம் என்றும் சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பாரபட்சமின்றி செயல்படுகிறோம்: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு விருது அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
Published on

சென்னை,

சட்டசபையில் நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் தாயகம் கவி (திரு.வி.க.நகர்) பேசினார்.

அப்போது அவர், திரைப்பட துரையினருக்கு தி.மு.க. ஆட்சியில் விருதுகள் அளிக்கப்பட்டது என்றும், மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தமிழ் மொழி காத்த பேராசிரியர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை பெருமைப்படுத்தி அவர்களுக்கு நினைவு இல்லங்கள், அரசு விழாக்கள், சிலைகள் அமைத்து பெருமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். காலத்தில் தான் எட்டையபுரத்தில் பாரதியாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கப்பட்டு, மணிமண்டபம் அமைக்கப்பட்டு சிறப்பு சேர்க்கப்பட்டது. ஜெயலலிதா ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபம் அமைத்தார். இதே சட்டசபையில் கயத்தாரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் மணிமண்டபம் அமைக்கச் சொல்லி நான் கோரிக்கை வைத்தபோது, நான் அமர்வதற்கு முன்பாகவே உடனடியாக பதிலை சொன்னதோடு மட்டுமல்லாமல், பிரம்மாண்டமான வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை அமைத்தவர் ஜெயலலிதா.

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இருந்ததை, ஜெயலலிதா 2011-ம் ஆண்டிலிருந்து படிப்படியாக ரூ.8 ஆயிரமாக உயர்த்தினார், சென்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார். எப்போதும் பத்திரிகையாளர் நலன் காக்கின்ற அரசு இது.

திரைப்படத் துறைக்கு குறைந்த பட்ஜெட்டிலே தயாரிக்கின்ற திரைப்படத்திற்கு மானியம் வழங்குகின்ற நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் 20.6.2018-ல் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். ஒரு திரைப்படத்திற்கு ரூ.7 லட்சம் வீதம் 149 திரைப்படங்களுக்கு, ஒரே நாளிலே ரூ.10 கோடியே 43 லட்சம் வழங்கப்பட்டது. அதிலே ஒரு சிறப்பு என்னவென்றால், அந்த படத்திலேயும் தி.மு.க. உறுப்பினர் அம்பேத்குமார் படத்திற்கு ஒரு விருதையும், நடிகர் கருணாஸ் தயாரித்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்திற்கும், தி.மு.க. உறுப்பினர் சுந்தர் குடும்பத்தார் தயாரித்த படத்திற்கும் மூன்று விருதுகளை பாரபட்சமின்றி வழங்கி இருக்கிறோம்.

திரைப்படத்துறையினர் நல வாரியத்திற்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்கின்ற ஒரே அரசு, நாங்கள் தான். 1.1.2018 முதல் 31.12.2018 வரை, உறுப்பினர்களிடமிருந்து நலத்திட்டங்கள் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் 205 தான். ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவிலே வழங்கப்படவிருக்கிறது. எனவே, திரைப்படத் துறை தள்ளாடவில்லை, நிலையாக இருக்கின்றது, நன்றாக இருக்கின்றது. திரைப்படத் துறை நல வாரிய உறுப்பினர்கள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் தமிழ்செல்வன் (பெரம்பலூர் தொகுதி) பேசும்போது, பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்ட அ.தி.மு.க. அரசு, அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்துள்ளார்கள். பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பது தொடர்பாக, சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க குழு அமைக்கப்படும்.

அந்தக் குழுவின் தலைவராக நிதித்துறை முதன்மை செயலாளரும், செயலாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளரும், உறுப்பினர்களாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.

இக்குழு, பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பது குறித்து, அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, அறிக்கை பெறப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com