நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ. மீது மேலும் ஒரு வழக்கு

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ. மீது மேலும் ஒரு வழக்கு
Published on

நெல்லை,

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார். இவர் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தனது ஆதரவாளர்களுடன் மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் இருந்தார். அப்போது அந்த வீட்டில் வைத்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது.

இதை அறிந்த அப்பகுதி கிராமங்களை சேர்ந்த சிலர், நாங்கள் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலில் ஓட்டு போடமாட்டோம் என்று முடிவு செய்து உள்ளோம். ஆனால் வாக்காளர்களுக்கு நீங்கள் எப்படி பணம் கொடுக்கலாம் என்று கூறினர்.

மேலும் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலரை கிராம மக்கள் தாக்கி, வீட்டில் வைத்து பூட்டி சிறை வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை திறந்து சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை மீட்டனர்.

இதுகுறித்து அவர் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் எம்.எல்.ஏ.வை தாக்கியதாக, கிராம மக்கள் 25 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சரவணக்குமார் எம்.எல்.ஏ., சாதியை கூறி அவதூறாக பேசியதாக ஆயர்குளத்தை சேர்ந்த பருத்திக்கோட்டை நாட்டார்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழன்ராஜா என்பவர் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com