ஓசி பயணம் வேண்டாம்: டிக்கெட் கேட்டு அடம் பிடித்த மூதாட்டி - அதிமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.
ஓசி பயணம் வேண்டாம்: டிக்கெட் கேட்டு அடம் பிடித்த மூதாட்டி - அதிமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு
Published on

கோவை,

கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரசு டவுன் பஸ் சென்றது.இந்த பஸ்சில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பயணம் செய்தனர். பஸ்சில் வால்பாறையை சேர்ந்த வினித் என்பவர் கண்டக்டராக இருந்தார்.

பஸ் மதுக்கரை மார்க்கெட் அருகே வந்தபோது பாலத்துறைக்கு செல்வதற்காக காத்திருந்த துளசியம்மாள் என்ற மூதாட்டி ஏறினார். டவுன் பஸ்சில் பயணிக்க பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்பதால், கண்டெக்டர் பஸ்சில் ஏறியதும் மூதாட்டிக்கு இலவச டிக்கெட்டை கிழித்து கொடுத்தார்.

அப்போது அந்த மூதாட்டி பணத்தை எடுத்து கண்டெக்டரிடம் நீட்டினார். உடனே கண்டக்டர் பாட்டிமா இதில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் இலவசம். காசு வேண்டாம். நீங்கள் வைத்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் அந்த மூதாட்டி நீ பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் கொடு. இல்லையென்றால் எனக்கு டிக்கெட் வேண்டாம் என தெரிவித்தார்.

இருப்பினும் கண்டெக்டர் டிக்கெட்டை மூதாட்டியிடம் கொடுக்க முயன்றார். ஆனால் மூதாட்டியோ அதனை வாங்க மறுத்ததுடன், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன். நான் டிக்கெட்டுக்கு பணம் தருவேன். காசு இல்லாம தரும் டிக்கெட் எனக்கு வேண்டவே வேண்டாம். பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் கொடு என அடம் பிடித்தார்.

இதையடுத்து கண்டக்டரும் வேறுவழியில்லாமல் மூதாட்டியிடம் பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் மற்றும் மீதி சில்லரையை கொடுத்து சென்றார்.

இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக மதுக்கரை நகர தி.மு.க. செயலாளரான ராமு என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.கவினர் வேண்டுமென்றே தங்களது கட்சியை சேர்ந்த துளசியம்மாள் என்ற மூதாட்டியை பஸ்சில் வரவழைத்து பெண்களுக்கு இலவச டிக்கெட் என்றும் தெரிந்தும், டிக்கெட் கேட்குமாறு கூறி சண்டை போட வைத்துள்ளனர்.

தற்போதைய தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வீடியோ எடுத்து, அந்த சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தி.மு.க. அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

அவரது புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த 4  பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com