ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான அரசு மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலத்தால் பரபரப்பு ஏற்பட்டது. #Jayalalithaa
ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
Published on

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட அரசு சார்பில் 5 மருத்துவர்கள் அடங்கி குழு ஏற்படுத்தப்பட்டது.

இந்த குழுவில் அரசு மருத்துவர் பாலாஜி இடம் பெற்று இருந்தார்.

மருத்துவர் பாலாஜி ஆஜர்

திருப்பரங்குன்றம் உள்பட 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த போது ஜெயலலிதா சிகிச்சையில் இருந்து வந்தார். அப்போது தேர்தல் படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. தனது முன்னிலையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக மருத்துவர் பாலாஜி சான்றொப்பம் அளித்துள்ளார்.

இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி முக்கிய சாட்சியமாக விசாரிக்கப்பட்டு வருகிறார். ஏற்கனவே 2 முறை இவர் ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் 3-வது முறையாக ஆஜராக ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

தனது முன்னிலையில் கைரேகை பதிவு

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான அனைத்து மருத்துவ ஆவணங்களையும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களை நீதிபதி பரிசீலித்து வருகிறார். ஆவணங்களில் கூறப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் குறித்து மருத்துவர் பாலாஜியிடம் நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் அளித்தார்.

ஜெயலலிதா கைரேகைக்கு சான்றொப்பம் அளித்தது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது அவர், தேர்தல் படிவத்தில் வைக்கப்பட்ட கைரேகை ஜெயலலிதாவின் கைரேகை தான் என்றும், தனது முன்னிலையிலேயே அந்த ரேகை பதிவு செய்யப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

அழைத்தது யார்?

ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பமிட உங்களை அழைத்தது யார்?, முதல்-அமைச்சராக இருந்து வந்த ஒருவரின் கைரேகைக்கு சான்றொப்பமிட வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரோ முதல்-அமைச்சரின் பொறுப்புகளை கவனித்து வரும் மூத்த அமைச்சரோ உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பமிட யாரும் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும், வாய்மொழி உத்தரவின் பேரில் சான்றொப்பமிட்டதாகவும் கூறியதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதியம் 1.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. போயஸ் கார்டன் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த கார்த்திகேயன் இன்று (வியாழக்கிழமை) ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி அவர் இன்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கிறார்.

சுகாதாரத்துறை செயலாளர் மறுப்பு

விசாரணை ஆணையத்தில் டாக்டர் பாலாஜி கூறிய வாக்குமூலம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் மருத்துவமனையில் தேவையான டாக்டர்களின் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களை சிகிச்சைக்கு அவ்வப்போது வரவழைப்பது, இயன்முறை சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் இருந்து பிசியோ தெரபி நிபுணர்கள் வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக எழுத்துப்பூர்வமான கடிதங்கள் போன்றவை எங்களிடம் இருந்து அனுப்பப்பட்டன.

கைரேகை பெற்றதை பொறுத்தவரையில், அந்த சமயத்தில் என்னுடைய தாய் இறந்த பின் நடந்த காரியங்களில் இருந்ததால், என்னிடம் இருந்து எந்தவொரு உத்தரவும் எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ டாக்டர் பாலாஜி அல்லது மற்ற யாரும் கோரவில்லை. கைரேகை பெறுவதை பொறுத்தவரையில், எனக்கு தெரிந்த வரை கைரேகை பெறும்போது அரசு டாக்டர் முன்பு நடைபெற வேண்டும் என்று மட்டும் தான் தேவை இருந்ததே தவிர, அதற்கு தனிப்பட்ட உத்தரவு தேவைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com