குறுகலான சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள்

கூத்தாநல்லூர் அருகே குறுகலான சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
குறுகலான சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள்
Published on

கூத்தாநல்லூர் அருகே குறுகலான சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் காடுபோல் வளர்ந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கருவேல மரங்கள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இருந்து சேந்தங்குடி செல்லும் சாலையில் திட்டச்சேரி கிராமம் உள்ளது. இந்த திட்டச்சேரி கிராமத்தையொட்டிய பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பக்கூடிய சாலையில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு சாலை மிகவும் குறுகலாக உள்ளது.

வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள இந்த குறுகலான சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் சூழ்ந்து அடர்ந்த காடு போல காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

போக்குவரத்து மிகுந்த சாலை

குறுகலான சாலை மன்னார்குடி, திருவாரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், எட்டுக்குடி, திருநெல்லிக்காவல், விக்ரபாண்டியம், சேந்தங்குடி, வடபாதிமங்கலம் போன்ற முக்கியமான ஊர்களை இணைக்கும் வழித்தடமாகவும் உள்ளது.

அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், சரக்கு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக தினமும் சென்று வருகின்றன. இந்த நிலையில் திட்டச்சேரி என்ற இடத்தில், வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள குறுகலான சாலை கடந்த சில ஆண்டுகளாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையிலேயே இருந்து வருகிறது.

விபத்து அபாயம்

எதிர் எதிரே வரக்கூடிய வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாமல், எதிரும் புதிருமாக அப்படியே சில மணி நேரங்கள் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறுகலான சாலையால் வாகனங்கள் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே, குறுகலான சாலையை அகலப்படுத்தவும், சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கருவேலமங்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com