குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயில் மோதி பலி

குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தனர். அவர்களின் நண்பர் படுகாயம் அடைந்தார்.
குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயில் மோதி பலி
Published on

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டம் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் குழந்தை துரை. இவருடைய மகன் ஜெபசிங் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றார்.

அங்கு தனது நண்பர்களான தூத்துக்குடியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் ச.மாரிமுத்து (வயது 23), காளிப்பாண்டியன் மகன் கா.மாரிமுத்து (23) ஆகியோரை சந்தித்தார்.

இவர்கள் 3 பேரும் குற்றவழக்குகளில் கைதாகி ஜெயிலில் இருந்தபோது ஏற்பட்ட பழக்கத்தால் நண்பர்களாகி உள்ளனர்.

தண்டவாளத்தில் மது அருந்தினர்

இரவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், தூத்துக்குடி 3-வது மைல் ரெயில்வே பாலத்துக்கு கீழே தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மீளவிட்டான் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து நண்பர்கள் 3 பேரும் மது அருந்தினர்.

பின்னர் மதுபோதையில் 3 பேரும் ரெயில் தண்டவாளத்திலேயே படுத்து தூங்கினர். ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து ஆகிய 2 பேரும் தண்டவாளத்தின் குறுக்காக படுத்து தூங்கினர். ஜெபசிங், தண்டவாளத்தின் நடுவில் நீளவாக்கில் படுத்து உறங்கினார்.

ரெயில் மோதி 2 பேர் சாவு

நேற்று அதிகாலை 3 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து லோடு ஏற்றிய சரக்கு ரெயில், ஆந்திர மாநிலம் நூஸ்வித் ரெயில் நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் தூத்துக்குடி 3-வது மைல் ரெயில்வே பாலம் பகுதியில் சென்றபோது, அங்கு தண்டவாளத்தில் தூங்கிய ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து, ஜெபசிங் ஆகிய 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது.

இதில் தண்டவாளத்தின் குறுக்காக தூங்கிய ச.மாரிமுத்து, கா.மாரிமுத்து ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். தண்டவாளத்தின் நடுவில் நீளவாக்கில் தூங்கிய ஜெபசிங் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

குண்டர் சட்டத்தில் கைதானவர்

ரெயில் மோதி இறந்த ச.மாரிமுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்தார். அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியில் வந்தார். இதேபோன்று கா.மாரிமுத்து மீது 2 வழிப்பறி வழக்குகளும், ஜெபசிங் மீது கொலை வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com