

சென்னை,
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. அவற்றின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 92 ரூபாய் 25 காசுக்கும், டீசல் விலை 85 ரூபாய் 63 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி பார்சல் லாரி வாடகை கட்டணம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து சென்னை வால்டாக்ஸ் ரோடு பார்சல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ரமேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றத்தையடுத்து எங்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பார்சல் வாடகை கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. எனவே குறைந்தபட்ச பார்சல் கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.