ரேஷன் பொருள் கொள்முதலில் முறைகேடு எதிரொலி: பருப்பு வினியோகத்துக்கான ரூ.566 கோடி டெண்டர் ரத்து; புதிய டெண்டர் வெளியீடு

ரேஷன் கடை பருப்பு கொள்முதலில் முறைகேடு நடைபெறுவதாக வந்த புகாரின் எதிரொலியாக, பருப்பு வினியோகத்துக்கான ரூ.566 கோடி மதிப்புள்ள டெண்டரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் பொருள் கொள்முதலில் முறைகேடு எதிரொலி: பருப்பு வினியோகத்துக்கான ரூ.566 கோடி டெண்டர் ரத்து; புதிய டெண்டர் வெளியீடு
Published on

அறப்போர் இயக்கம் புகார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சமீபத்தில் அனுப்பிய புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் 2 பெரிய அளவிலான டெண்டர்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. முதலாவது முறைகேடு, கொரோனா நிவாரணத்துக்காக வழங்கப்படும் மளிகைப் பொருட்களைக் கொண்ட கிட் தொடர்பாக விடப்பட்ட டெண்டர் ஆகும். இரண்டாவது, 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு (கனடியன் லென்டில்) கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு ஆகும்.

ரேஷன் கிட் கொள்முதல்

கொரோனா நிவாரணத்துக்காக 13 மளிகைப் பொருட்கள் கொண்ட 2.11 கோடி கிட் கொள்முதலுக்கு டெண்டர் கோரப்பட்டது.இந்த டெண்டருக்கான மதிப்பு, ரேஷன் பொருட்கள் மதிப்பின் அடிப்படையில் முதலில் ரூ.837 கோடியாக (அமுதம் அங்காடி சில்லறை விற்பனை விலை) மதிப்பிடப்பட்டது. மொத்தமாக கொள்முதல் செய்யும்போது சில்லறை விற்பனை விலையில் இருந்து 10 முதல் 20 சதவீதம்வரை விலை குறைக்கப்படும். அதன்படி ரூ.670 கோடியில் இருந்து ரூ.753 கோடிக்குள் 2.11 கோடி கிட்களை வாங்கிவிடலாம்.

அதிகாரிகள் முறைகேடு

சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் நிறுவனத்தின் ஒவ்வொரு டெண்டரும் கிறிஸ்டி குழுமத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டுள்ளன. அதில் அந்த நிறுவனம் மற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி உள்ளிட்ட சில உயர் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பொருட்களை மொத்த விலைக்கு மட்டுமல்ல, சில்லறை விலைக்கும் அதிகமாக கிறிஸ்டி குழும நிறுவனம் வழங்கியதால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டெண்டர்களை ஒதுக்குவதில் இந்த ஆட்சியிலும் அதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இ-டெண்டர் முறை மூலம் டெண்டர் கோரப்படுவது, போட்டியைத் தவிர்த்து, குமாரசாமியின் கிறிஸ்டி குழுமத்துக்கு டெண்டரை அளிப்பதற்கு வழிகோலுகிறது.

ரத்து செய்ய வேண்டும்

20 ஆயிரம் டன் துவரம்பருப்பு கொள்முதல் செய்வதற்கான டெண்டர் 5-ந் தேதியன்று திறக்கப்பட்டு, அதில் 3 நிறுவனங்கள் பங்கேற்றன. அவை மூன்றுமே கிறிஸ்டி நிறுவனத்துடன் வியாபாரத் தொடர்புடையவை. துவரம்பருப்பின் சில்லறை விற்பனை விலை கிலோவுக்கு ரூ.106தான். ஆனால் அதை ஏன் கிலோவுக்கு ரூ.143.50 என்று மொத்த விற்பனை விலையை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்கிறது? இதன் மூலம் ரூ.80 கோடி முதல் ரூ.100 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.எனவே இந்த கொள்முதலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மளிகைப்பொருள்

கிட்களுக்கு புதிய டெண்டரை விடுக்க வேண்டும். சிறு வர்த்தகர்களும் பங்கேற்கும் அளவுக்கு டெண்டர் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டெண்டர் ரத்து

இந்தப் புகாரின் அடிப்படையில் அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, பருப்பு வினியோகம் செய்வதற்காக ஒப்பந்ததாரர் ஒருவருக்கு அளிக்கப்பட்டிருந்த ரூ.566 கோடி மதிப்புள்ள டெண்டரை தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் நிறுவனம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல், பருப்பு கொள்முதலுக்கான புதிய டெண்டரை இந்நிறுவனம் கோரியுள்ளது. அதோடு, 80 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 2.11 கோடி மளிகைப்பொருள் கிட்களை வினியோகம் செய்வதற்கான 2 டெண்டர் நிபந்தனைகளை குடிமைப்பொருள் நிறுவனம் திருத்தி அமைத்து, அதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

திருத்தப்பட்ட நிபந்தனைகள்

இதற்கு முந்தைய நிபந்தனைகள், குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ அல்லது அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கோ டெண்டர் கிடைப்பதற்கு வழிவகை செய்தன. அதுபோல அரசுக்கு மட்டுமே பொருட்கள் வினியோகம் செய்த அனுபவம் உள்ள நிறுவனங்கள் மட்டுமே கடந்த டெண்டரில் பங்கேற்க முடிந்தது.ஆனால் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, தனியாருக்கும் பொருட்கள் வினியோகம் செய்த அனுபவங்களை கொண்டிருக்கும் நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள

மதிப்பீட்டின் அடிப்படையில், 5 வர்த்தக நிறுவனங்கள் பொருள் வினியோகம் செய்ய முடியும். அந்த வகையில், புதிய டெண்டர் நிபந்தனைகள் மூலம் 190 சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் பயன்பெறும்.

பழைய டெண்டரை ரத்து செய்ததோடு, புதிய மாற்றங்களை கொண்டு வந்திருப்பதை அறப்போர் இயக்கம் வரவேற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com