

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் கடந்த 21.1.2018 அன்று நடந்த அ.ம.மு.க. பொதுக்கூட்டத்தில், அப்போதைய கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவதூறாக பேசியதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஜவகர் முன்பு ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கை அடுத்த மாதம் (செப்டம்பர்) 20-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடர்பாக வந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஓ.பன்னீர்செல்வம் கையில் கட்சி வந்து விட்டது. அவரால் தான் இந்த கட்சியை காப்பாற்ற முடியும் என்று கட்சி தொண்டர்கள் நினைக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாடும் சசிகலாவுக்கு இந்த தீர்ப்பு புது நம்பிக்கையை கொடுத்திருக்கும். டாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய மத்திய அரசு உதவினால் ஏதாவது செய்ய முடியும். ஜி.எஸ்.டி. வரியால் பா.ஜ.க. வருகிற தேர்தல்களில் தோல்வியை தழுவும் என்றார். அப்போது வக்கீல் திருமார்பன் உடனிருந்தார்.