அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என்றும், மதங்களை வேறுபடுத்தி காட்ட முடியாது என்றும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், விசுவ இந்து பரிஷத் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அவரின் கருத்துக்கள் முழுவதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது.

ஸ்ரீ ராமதாச மிஷன் சர்வதேச சங்கத்தின் சார்பில் ராம ராஜிய ரத யாத்திரை ஒன்று கடந்த 13.2.2018 அன்று அயோத்தியாவில் தொடங்கியது. இந்த ரத யாத்திரை, அச்சங்கத்தின் தேசியச் செயலாளர் சக்தி சாந்த ஆனந்த மகரிஷி தலைமையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புறப்பட்டு, மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.

20.3.2018 அன்று கேரளா மாநிலம் புனலூரிலிருந்து திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வழியாக நமது மாநிலத்திற்குள் நுழைந்து, ராஜபாளையம், மதுரையை வந்தடைந்து, மறுநாள் 21.3.2018 அன்று ராமேசுவரத்தை அடைகிறது.

பின்னர், ராமேசுவரத்தில் இருந்து 22.3.2018 அன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வழியாக கன்னியாகுமரி அடைந்து, மறுநாள் 23.3.2018 அன்று திருவனந்தபுரத்திற்கு செல்கிறது.

ராம ராஜிய ரத யாத்திரை நமது மாநிலத்தில் வருவதற்கு சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழ் ஆதரவு அமைப்புகளும் மற்றும் சில அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து, அந்த ரத யாத்திரையை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று கோரி காவல் துறையினரிடம் மனுக்கள் அளித்தனர்.

மேற்கண்ட 5 மாநிலங்களிலும் இந்த ரத யாத்திரைக்கு எந்தவிதமான எதிர்ப்பும் எழவில்லை. அம்மாநிலங்களில் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இதுவரை இந்த யாத்திரை கடந்து வந்துள்ளது. இந்த ரத யாத்திரை தமிழ்நாட்டிற்குள் வருவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, யாத்திரை செல்லும் மாவட்டங்களில் காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும், திருநெல்வேலி, காஞ்சீபுரம், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் 121 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 மாநிலத்திலே இந்த ரத யாத்திரை நடந்திருக்கிறது. இதில் அரசியல் சாயம் பூசுவது சரியல்ல. அவர்கள் (எதிர்க்கட்சிதலைவர்) பேசும்போது எங்களுடைய உறுப்பினர்கள் அமைதியாக இருந்தார்கள். ஆனால் நான் பேசும்போது, தொடர்ந்து குறுக்கிடுகிறார்கள். கடுஞ்சொற்களை எல்லாம் உபயோகப்படுத்தினார். அதை எல்லாம் நாங்கள் பொறுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இங்கே அரசியல் சாயம் பூசுவது சரியல்ல.

தமிழகத்தை பொறுத்த வரைக்கும் எல்லா மதத்திற்கும் சம உரிமை உண்டு. அதை யாரும் தடை செய்ய முடியாது. ஜனநாயக நாடு. இந்த மதம், அந்த மதம் என்று வேறுபடுத்தி காட்ட முடியாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை. அந்த கடமையை கடைப்பிடித்து தான் இங்கே பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

நான் ஏற்கனவே கூறியது போல, இந்த ரதம் பல மாநிலங்கள்; மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, கேரளா எல்லாவற்றையும் கடந்து தான் வந்திருக்கிறது. மீண்டும் இங்கே முடித்து விட்டு கேரளா வழியாகத் தான் செல்கிறது. இதிலே எவ்வித பிரச்சினையும் எழுந்ததாக எனக்கு தெரியவில்லை. நீங்களும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள். அதுதான் தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com