முன்னாள் மாணவர்களிடம் உதவிகளை பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பள்ளிக்கல்வி துறை நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல், முன்னாள் மாணவர்களிடம் உதவிகளை பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
முன்னாள் மாணவர்களிடம் உதவிகளை பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அப்பள்ளிகளை தத்தெடுக்கவும், நிதியுதவி வழங்கவும் முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பள்ளிச்சூழலை மேம்படுத்த இது சிறப்பான ஏற்பாடு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் இத்தகைய உதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது.

ஓட்டை வாளியை வைத்துக்கொண்டு நீர் இறைத்தால் அது தண்ணீருக்குத்தான் கேடாகுமே தவிர தாவரங்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது. அதைப்போலத்தான் தமிழகத்தின் கல்வி நிர்வாகத்தில் ஏராளமான குறைபாடுகளை வைத்துக்கொண்டு, தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் நிதியுதவி பெறுவதும் பயன்தராது. பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பெறப்படும் நிதி விழலுக்கு இறைத்த நீராக பயனற்ற வகையில் வீணடிக்கப்படுமே தவிர, கல்வி வளர்ச்சிக்கு பயன்படாது.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 2012-2017 காலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், அதற்கான திட்ட வரைவை தமிழக அரசு அனுப்பாததால் நிதியின் அளவை ரூ.4,800 கோடியாக குறைத்து விட்டது. இதனால் ரூ.3,700 கோடி வீணாகிவிட்டது. அதுமட்டுமின்றி, இடைநிலைக் கல்வித்திட்டத்தின்படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4,400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்க முடியாத நிலையிலும், கல்வித்தரத்தை மேம்படுத்த முடியாத நிலையிலும் தான் தமிழக கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளன. இதை சீரமைக்காமல் மற்றவர்களிடம் இருந்து நிதியுதவி பெறுவது வீண். எனவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க கல்வியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும்.

அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவிகளைப் பெற்று அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுவது தான் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com