தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை

பெண்ணாடம் அருகே பயிர்க்கடன் வழங்கக்கோரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
Published on

பெண்ணாடம், 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மூலம் கிளிமங்கலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய கடன், நகைக்கடன் பெற்று பயன் பெற்று வந்தனர். கடலூர்-அரியலூர் மாவட்ட எல்லையில் உள்ள கணபதிகுறிச்சி, குறுக்கத்தான்சேரி, கிளிமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிலருக்கு அரியலூர் மாவட்ட பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. அரியலூர் மாவட்டத்தில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு கிளிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்க முடியாது என மறுத்து வந்தனர்.

விவசாயிகள் முற்றுகை

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் மேற்கண்ட விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க கூட்டுறவு பதிவாளருக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிளிமங்கலம் பகுதி விவசாயிகள் கடனுக்காக கிளிமங்கலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை அணுகினர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள், உங்களுக்கு கடன் வழங்குவது குறித்து எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக மாவட்ட அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு கடிதம் இதுவரை வரவில்லை எனக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்களுக்கு பயிர்க்கடன் வழங்கக்கோரி திடீரென கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா. உடனே அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com