கிடா வெட்டி விருந்து வைத்த விவசாயிகள்

சிங்கம்புணரி அருகே மட்டிகண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்ததை கொண்டாடும் விதமாக விவசாயிகள் கிடா வெட்டி விருந்து வைத்தனர்.
கிடா வெட்டி விருந்து வைத்த விவசாயிகள்
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மட்டிகண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்ததை கொண்டாடும் விதமாக விவசாயிகள் கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

மட்டிகண்மாய்

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்டது மட்டிகரைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மட்டிகண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயிலிருந்து 600 ஏக்கர் ஆயக்கட்டு பாசனம் நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக கண்மாயில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருந்ததால் போதிய நீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் போதிய தண்ணீர் தேக்க முடியாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் இருந்து உருவாகி சிங்கம்புணரி வழியாக வரும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் மட்டிகால்வாய் வழியாக மட்டிகண்மாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது.

கிடா விருந்து

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தற்போது பாலாற்றில் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் மட்டிகால்வாய் வழியாக மட்டிகண்மாய்க்கு வந்தது. தற்போது கடந்த 10 மாதங்களுக்கு பிறகு இந்த கண்மாய் மீண்டும் முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனால் சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பு உள்ள விவசாயிகள் மற்றும் ஆயக்கட்டு பாசனக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும், கண்மாய் மறுகால் பாய்ந்ததை ஆயகட்டுக்காரர்கள், மட்டிகண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தண்ணீரில் மலர் தூவியும் கொண்டாடினர். நேற்று முன்தினம் கண்மாய் மடை அருகே 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிட்டு வருண பகவானையும், விவசாய நிலங்களையும் வணங்கினர். தொடர்ந்து பலியிட்ட ஆடுகளை கறி சமைத்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கிடா விருந்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com