வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி

கோடை வெயில் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி
Published on

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் மான், காட்டுபன்றி, செந்நாய், குரங்குகள் என பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறி வனப்பகுதியில் நுழைபவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதன் காரணமாக மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. அவ்வாறு வரும் மான்களை சில சமயங்களில் நாய்கள் துரத்தி கடித்து கொன்று விடுகின்றன. இதனால் வன விலங்குகள் காட்டில் இருந்து தண்ணீர் தேடி வெளியே வராமல் இருக்க கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை காப்பு காடு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் திருவண்ணாமலை வன சரகத்தை சேர்ந்த அலுவலர்கள் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரக அலுவலர் சீனுவாசன் கூறுகையில், 'திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மலையை சுற்றி வனப்பகுதியில் வன விலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகள் உள்ளன. கோடைகாலம் தொடங்கி உள்ளதால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே செல்லாமல் இருக்க தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com