சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பெண்கள் கருகி சாவு

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 2 பெண்கள் கருகி சாவு
Published on

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சண்முகையா (வயது 65). இவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற ரோல் கேப் வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது.

அந்த ஆலையில் உள்ள ஒரு அறையில் நவீன முறையில் ரோல் கேப்வெடி தயாரிப்பதற்காக ஒரு வகையான புதிய எந்திரம் சில தினங்களுக்கு முன்பு நிறுவப்பட்டதாம்.

2 பெண்கள் பலி

அந்த எந்திர அறையில் நேற்று மண்குண்டாம்பட்டி ஓ.பி.ஆர். நகரை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மனைவி பாலசரசுவதி (வயது 39), சிவகாசி அருகே உள்ள விசுவநத்தத்தை சேர்ந்த ராமர் மனைவி முருகலட்சுமி (37), அழகு லட்சுமி, பாக்கியலட்சுமி, ராதா, ரெங்கநாயகி, அன்னத்தாய் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர்

மதியம் 12.30 மணி அளவில் ரசாயன மருந்து கலக்கும் பணியில் பால சரசுவதி, முருகலட்சுமி ஆகிய 2 பேரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. உடனே தீப்பற்றி பரவியதில் பாலசரசுவதி, முருகலட்சுமி ஆகிய 2 பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அந்த அறையில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற பெண்கள் உடனடியாக வெளியே ஓடி உயிர் தப்பினர்.

உடல்கள் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பலியான பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்த பாலசரசுவதிக்கு பொன் பிரியா, பரமேசுவரி என 2 மகள்களும், மாணிக்க விஜய் என்ற மகனும் உள்ளனர். முருகலட்சுமிக்கு சதீஷ்குமார், சபிதா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com