வெள்ள நிவாரண பணிகள்: தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ள நிவாரண பணிகள்: தமிழகத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உடனடியாக வழங்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புரெவி புயல் நேரடியாக தமிழகத்தை தாக்கவில்லை என்றாலும் கூட, அதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பெய்து வரும் மழையால், மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூர், விழுப்புரம் மற்றும் காவிரிப் பாசன மாவட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு-நிவாரண பணிகளை மத்திய-மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் அனுப்பப்பட்டு மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் நடந்து வருகின்றன. மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அடுத்த சில நாட்களில் நிலைமை மோசமடைவதை தடுக்க மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை போர்க் கால அடிப்படையில் விரைவுபடுத்த வேண்டும். சேதமடைந்த பயிர்கள், குடிசைகள், உயிரிழந்த கால்நடைகள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் மக்கள் கடந்த சில வாரங்களாக முற்றிலுமாக வாழ்வாதாரங்களை இழந்து தவிப்பதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட இப்போது தான் மத்திய குழு வந்துள்ளது. அந்த குழு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை அளித்த பிறகு தான் மத்திய அரசின் உதவி கிடைக்கும். ஆனால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு உடனடி நிதி உதவியாக ரூ.1,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com