

சென்னை,
தங்கம் அணிவதை பலரும் கவுரவமாக கருதுவதால் அதன் மவுசு தொடர்ந்து கூடிக்கொண்டே இருக்கிறது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடுகிறது.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் தங்கநகைகள் வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவது வழக்கம். எனவே பண்டிகை காலங்களின்போது தங்க நகைகள் விற்பனை அமோகமாக நடை பெறும். ஆனால் இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை, தங்கம் விலை அதிரடி உயர்வு போன்ற காரணங்களால் தீபாவளி பண்டிகை தங்கநகைகள் விற்பனை மந்தநிலையில் உள்ளது.
பெரும்பாலான நகைக்கடைகள் வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை தங்க-வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தி லால் ஜலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 21-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 124-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகிறது.
கடந்த ஆண்டை காட்டிலும் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. தங்கத்தின் மீதான விலை உயர்வே விற்பனை மந்தத்துக்கு காரணம்.
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டிருக்கிறது. எனவே தங்கத்தின் விலை ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 7 நாட்களுக்கு மேல் இருப்பதால், வரும் நாட்களில் தங்க நகைகள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.