

தஞ்சாவூர்,
புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த 19-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கணவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சசிகலா பெங்களூரு ஜெயிலில் இருந்து 15 நாள் பரோலில் தஞ்சை வந்தார். ம.நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் சசிகலா தஞ்சை அருளானந்த நகரில் தங்கி இருந்து வருகிறார். அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் அங்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் திரைப்பட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி சசிகலாவுக்கு ஆறுதல் கூறுவதற்காக நேற்று மாலை தஞ்சை வந்தார். அருளானந்த நகருக்கு வந்த விஜயசாந்தி, சசிகலாவின் வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். சுமார் 2 மணி நேரம் அங்கு இருந்த அவர் பின்பு புறப்பட்டு சென்றார்.
அவரை தொடர்ந்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அய்யாக்கண்ணுவும் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார்.