இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர வலியுறுத்தப்படும் - கவர்னர் உரை

கவர்னர் உரை: இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறினார்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்கள் கொண்டுவர வலியுறுத்தப்படும் - கவர்னர் உரை
Published on

சென்னை

16 -வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.கவர்னர் தனது உரையை, ``வணக்கம் என தமிழில் தொடங்கினார். மேலும், ``தமிழ் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள் என்றார்.

தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் மேலும் கூறியதாவது;-

அரசின் ஒவ்வொரு செயலும் சமூகநீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொருளாதார நிதியை அடிப்படையாக கொண்டிருக்கும். மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தமிழகம் முழுவதும் மீண்டும் அமைக்கப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தேவைப்படும் உதவிகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளாக பிரதமரிடம் முதல்வர் முன்வைத்திருக்கிறார்.

ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் ஒதுக்கீடு போதுமான அளவில் இல்லை. தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும். `உறவுக்கு கை கொடுப்போம்.. உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப ஒன்றிய அரசுடன் நல்லுறவு பேணுவோம்.

விவசாயிகள் நலனை பாதுகாக்க, வேளாண் உற்பத்தியை பெருக்க, ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும்.நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது; தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும்; அதை இந்த அரசு உறுதி செய்யும்.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழியை இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.

கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com