

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட மக்கள் நெரிசல் நிறைந்த மாநகரங்களில் 500 பேட்டரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பேட்டரி பேருந்துகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 100 பேட்டரி பேருந்துகள் ஜெர்மனி நாட்டின் கே.எப்.டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ளது.
இதில் 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும், 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்பட உள்ளன. மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில், பேட்டரி பேருந்தின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதில் பயணம் செய்தனர்.
இந்த பேருந்துகளில் குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள பேட்டரியை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 320 கி.மீ. தூரம் வரை செல்லலாம். இதில் 54 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்மா ரோந்து வாகனம்
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு தமிழகத்தில் அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கூடுதல் டிஜிபி ஒருவர் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கூடுதல் டிஜிபியாக ஐ.பி.எஸ். அதிகாரி ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் அனைத்தையும் இந்தப் பிரிவே விசாரிக்கும்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அம்மா பேட்ரோல் என்ற பெயரில் புதிய ரோந்து வாகன சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் நடை பெறும் குற்றங்களைத் தடுக்கவும், வயதானவர்களுக்கும் உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளியை கூழாக்கும் இயந்திரம் கொண்ட வாகனம்
நாட்டிலேயே முதன்முறையாக அதிக விளைச்சலால் தேக்கமடையும் தக்காளியை கூழாக்கும் இயந்திரம் கொண்ட பிரத்யேக வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இச்சேவை வேளாண்துறைக்கு பயனளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் கொண்ட பிரேத்யேக வாகனம் கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் முதல்கட்டமாக வலம்வரவுள்ளது. ரூ.2 கோடி மதிப்பீட்டில், தக்காளியை பதப்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.