அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி
Published on

சென்னை,

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு திமுக உறுப்பினர் அட்டையை முதல்-அமைச்சர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு திமுக கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com