

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரிப் பாசன மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால், அங்குள்ள மக்களிடையே எழுந்துள்ள கோபமும், அக்கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்புவதையும் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.
நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5,400 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு ரூ.600 இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8 வழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும்போது ஒரு தென்னைக்கு ரூ.50 ஆயிரம் வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்?. தமிழக அரசு அறிவித்துள்ள நிதியுதவி யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல.
சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்த பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மக்களின் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரண பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் நிவாரணம் குறித்து முதல்-அமைச்சரின் அறிவிப்பு யானை பசிக்கு சோளப்பொறி கொடுத்தது போன்றுள்ளது. நிவாரண உதவி குறித்து அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டுகிறோம். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்தறிந்து முடிவு மேற்கொள்வது சாலச்சிறந்தது என்று கூறியுள்ளார்.