

சென்னை,
தமிழகத்தில் மதுரை மாவட்டத்திற்குட்பட்ட திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இதில், தி.மு.க. சார்பில் சரவணன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். டாக்டரான இவர் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை தி.மு.க. சமீபத்தில் வெளியிட்டது. அதில், அக்கட்சி சார்பில் போட்டியிட இந்த முறை சரவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் சரவணன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் இன்று அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நான் பா.ஜ.க.வின் உறுப்பினர். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் நான் இன்று மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
கொரோனா தடுப்பூசியானது நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது நமது தலைமையின் ஒரு சாதனை. அதனை யாராலும் மறுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.