அதிகாரிகள் சென்று பார்வையிட வேண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண பணிகள் தேவை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் உடனடியாக சென்று பார்வையிட வேண்டும் என்றும், நிவாரண பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
அதிகாரிகள் சென்று பார்வையிட வேண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண பணிகள் தேவை டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கஜா புயலின் கோரதாண்டவத்தால் சின்னாபின்னமாகியுள்ள மாவட்டங்களில் ஒன்றான நாகையில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவும் நான் சென்றிருந்தேன். நாட்டிற்கே உணவு வழங்கிய சோழ மண்டல மக்கள், தற்போது ஒரு வேளை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் தவித்துக்கொண்டிருப்பது கண்டு என் மனம் துடித்தது.

விவசாய தொழிலை புனிதமாகவும், பெருமையாகவும் கருதி வந்த இம்மண்ணின் மக்கள் தங்களின் விளை நிலங்கள், கால்நடைகள், வீடுகள், உடைமைகளை இழந்து கண்ணீருடன் உணவுக்காக காத்திருப்பதை கண்டு வேதனை அடைந்தேன். இயற்கை பேரிடம் நடக்கப்போவது தெரிந்தும் முன்கூட்டியே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்களை அனுப்பாமல் மக்களை இந்த அரசு பட்டினி போட்டிருக்கிறது.

மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய முதல்-அமைச்சர், சிறிதும் மனிதாபிமானமின்றி மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் வானிலையை காரணம் காட்டி பாதியில் திரும்புவது அம்மக்களை மேலும் வேதனைப்படுத்துவதாகவே உள்ளது. இப்படிப்பட்ட முதல்-அமைச்சர் இருந்து என்ன பயன்? என மக்கள் மிகுந்த கொதிப்பில் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சர்களை மக்கள் உள்ளே விடாமல் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அதிகாரிகளாவது உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com