

சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதேநாளில் தொடங்கவிருக்கும் நிலையில், பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும். எந்த வினாத்தாளும் ஆங்கிலத்திற்கு தனியாகவும், தமிழுக்கு தனியாகவும் தயாரிக்கப்படுவதில்லை. ஏதேனும் ஒரு மொழியில் தயாரிக்கப்பட்டு, மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கப்படுவது தான் வழக்கமாகும். தேர்வாணைய அதிகாரிகள் கூறுவதைப்போல ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டால், அதை தமிழில் மொழி பெயர்ப்பது ஒன்றும் கடினமல்ல. ஆனால், இதைக் கூட செய்வதற்கு முன்வராமல் ஆங்கிலத்திலேயே வினாத்தாள் வழங்குவது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.