இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

கோம்பை 15-வது வார்டு தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராமுத்தாய் (வயது 38). இவர், கடந்த 2015-ல் கோம்பையில் இருந்து போடி வழியாக கேரளாவுக்கு தனது மகன் சுரேஷூடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது போடி அருகே குரங்கணி என்னுமிடத்தில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமுத்தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கக்கோரி குடும்பத்தினர் உத்தமபாளையம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ராமுத்தாய் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சத்து 30 ஆயிரத்து 200 இழப்பீடு வழங்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதையடுத்து சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு ஒன்றை ராமுத்தாய் குடும்பத்தினர் தாக்கல் செய்தனர். இதில், வட்டியுடன் சேர்த்து ரூ.16 லட்சத்து 40 ஆயிரத்து 990 இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தொகை மகா லோக் அதாலத் மூலம் ரூ.14 லட்சத்து 70 ஆயிரமாக குறைக்கப்பட்டது. எனினும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கம்பம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு செல்ல இருந்த அரசு பஸ் டிரைவரிடம் ஜப்தி செய்வதற்கான நோட்டீசை கோர்ட்டு ஊழியர் வழங்கினார். அந்த பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் கோர்ட்டு ஊழியர்கள் பஸ்சை ஜப்தி செய்து உத்தமபாளையம் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் கம்பத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com