130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
130 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
Published on

கிராமசபை கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த அனைத்து ஊராட்சிகளிலும், காந்தி ஜெயந்தியையொட்டி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 11 மணி அளவில் கிராமசபை கூட்டம் நடக்கிறது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடக்கிறது.இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், காசநோய் இல்லாத கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும்.

திட்டங்களின் செயல்பாடுகள்

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூகத் தணிக்கை செயல் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதங்கள் நடத்தப்படவுள்ளது.

130 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com