தமிழக அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர முடியாது: குரூப்-2 தேர்வு பாடத்திட்ட மாற்றம் சரியான நடவடிக்கை - டாக்டர் ராமதாஸ் அறிக்கை

குரூப்-2 போட்டி தேர்வு பாடத்திட்ட மாற்றம் சரியான நடவடிக்கை என்றும், இனி தமிழக அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர முடியாது என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர முடியாது: குரூப்-2 தேர்வு பாடத்திட்ட மாற்றம் சரியான நடவடிக்கை - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 பணிகளுக்கான போட்டித்தேர்வின் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சாதகமா... பாதகமா? என்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அது குறித்த உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கிக்கூறி புரிய வைக்க வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

இதுவரை இரு போட்டித் தேர்வுகளும் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், இனி இவை ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதனால் மாணவர்கள் தேவையின்றி கூடுதலாக ஒரு போட்டித்தேர்வை எழுதுவது தவிர்க்கப்படும்.

இப்போதும் மொழிப்பாடம் முழுமையாக நீக்கப்படவில்லை. மாறாக முதனிலைத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இரு அலகுகள் தமிழ் பாடம் சேர்க்கப்பட்டு, அப்பாடங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வினாக்கள் கேட்கப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன் மூலம் தமிழ் தெரியாதவர்களும், தமிழ் படிக்காதவர்களும் ஆங்கிலத்தின் துணையுடன் அதிக மதிப்பெண் பெற்று முன்னேறுவது தடுக்கப்பட்டு, தமிழ்ப்படித்தவர்கள் ஒப்பீட்டளவில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் படித்த மாணவர்களுக்கு சாதகமான அம்சமாகும்.

அண்மைக்காலமாக, தமிழக அரசுப் பணிகளில் தமிழ் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வது அதிகரித்து வருகிறது. அதற்கு தமிழ் தெரியாதவர்கள்கூட போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது தான் காரணம் ஆகும். அந்த நிலையை மாற்ற தற்போது செய்யப்பட்டிருப்பது போன்ற பாடத்திட்ட மாற்றம் அவசியம். அந்த வகையில் தேர்வாணையத்தின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com