எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய அனுமதிக்கேட்டு கொடுக்கப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி எச்.ராஜாவுக்கு, தமிழக அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எச்.ராஜா அக்டோபர் 3-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்
Published on

சென்னை,

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளராக இருப்பவர் எம்.கண்ணதாசன். இவர், தன் வக்கீல் வி.இளங்கோவன் மூலம், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, ஐகோர்ட்டையும், போலீசாரையும் மிகவும் கடுமையான வார்த்தையால் விமர்சனம் செய்துள்ளார்.

வினய்சந்திரா மிஸ்ரா வழக்கில் 1995-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் உள்ள 4 தூண்களில், நீதித்துறை என்ற 3-வது தூண் மிகவும் முக்கியமானது. அதுதான், ஜனநாயகம் என்ற அமைப்பை தாங்கி பிடிக்கும் மத்தியில் உள்ள தூண். இருக்கின்ற அனைத்து சட்டங்களையும் பாதுகாக்கும் பாதுகாவலராகவும் நீதித்துறை திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட அமைப்புக்கு உள்ள கண்ணியத்தையும், மரியாதையையும் பாதுகாக்கவில்லை என்றால், ஜனநாயகம் என்ற அமைப்பின் முக்கிய கற்கள் அகற்றப்பட்டுவிடும். நாகரிகமான சமுதாயம் காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளது.

அதேபோல, கேரளா ஐகோர்ட்டு தீர்ப்பை முட்டாள் தனமானது என்றும், தகுதி இல்லாதது என்றும் கருத்து தெரிவித்தவருக்கு பச்சாதாபம் காட்ட முடியாது என்று கேரளா ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கருத்து தெரிவித்துள்ளது.

பொதுசாலையில் மேடை அமைக்கக்கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டும், அந்த உத்தரவை மீறி செயல்பட்டது மட்டுமல்லாமல், ஐகோர்ட்டின் கண்ணியத்தையும், மரியாதையையும் தரம் தாழ்த்தி எச்.ராஜா பேசியுள்ளார்.

மேலும், இவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் பயப்படுகின்றனர். எனவே, எச்.ராஜா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com