கல்லலில் நெல் கொள்முதல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம்

கல்லலில் நெல் கொள்முதல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் கூறினார்.
கல்லலில் நெல் கொள்முதல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம்
Published on

காரைக்குடி, 

கல்லலில் நெல் கொள்முதல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய குழு கூட்டத்தில் தலைவர் சொர்ணம் அசோகன் கூறினார்.

ஒன்றிய குழு கூட்டம்

கல்லல் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சொர்ணம் அசோகன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு மீனாள், மேலாளர் சுந்தரம் மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

உறுப்பினர் முத்தழகு:- வனப்பகுதிகளில் ஆர்.எஸ்.பதி தைல மரக்கன்றுகளை நடுவதற்கு பதிலாக முந்திரி உள்ளிட்ட பழ மரங்களை வளர்க்க வேண்டும், அப்போதுதான் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதிகளிலேயே இருக்கும். சையது அப்தாஹிர்:- 1957-ல் இருந்து செயல்பட்டு வந்த ஆத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட நாட்களாக இயங்கவில்லை. அதனை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பல இடங்களில் வனப்பகுதியினை கடந்து செல்லும் சாலைகளை சீரமைக்க வனப்பகுதியினர் அனுமதி தராமல் உள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

சங்கீதா:- கல்லலில் நெல் கொள்முதல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். எனது வார்டு பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். ரயில் நிலையம் அருகே பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும். பிரேமா:- சேதமடைந்த புலிக்குத்தி பெரிய கண்மாய் பகுதி பாலத்தை சீரமைக்க வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக கால்நடைகள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருது பாண்டியன்:- குன்றக்குடியில் மக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நீண்ட காலமாக செயல்படவில்லை. சங்கு உதயகுமார்:- மரிங்கிபட்டி ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம், மரிங்கிபட்டி, கல்லல் பகுதிகளில் உள்ள மயானங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். வாரச்சந்தை, பஸ் நிலைய பிரச்சினைகளுக்கு யூனியன் சேர்மன் தலைமையில் குழு அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

சுகாதார நிலையம்

தலைவர் சொர்ணம் அசோகன்:- வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே கல்லலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கவும், கல்லல் மற்றும் ஆத்தங்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லல் பஸ் நிலையம், வாரச்சந்தை பிரச்சினைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு கூட்டம் நடைபெற்றது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com