

சென்னை,
இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில், சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடந்து வருகிறது. இதில் 6 பண்புகளில் ஒன்றான சுற்றுச்சூழலை காக்கும் வகையில் கங்கா வந்தனம்- பூமி வந்தனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இளையதலைமுறையினர் முழுமையாக இதனை கடைப்பிடிக்கும் வகையில் 1,008 பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக 2 சிறிய மண்பானையில் தண்ணீரும், மண்ணும் வைத்து பூக்களால் அர்ச்சனை செய்து, கங்கா வந்தனம், பூமி வந்தனம் பூஜை செய்தனர்.
நாம் வாழும் பூமியை பாதுகாப்பதுடன், தண்ணீரின் பயன்பாடு, சிக்கனம் குறித்து பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. சுற்றுச்சூழலை பேணி காக்கும் வகையில் மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
பஞ்ச பூதங்கள்
முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கண்காட்சி அமைப்பு குழு துணைத்தலைவர் ஆர்.ராஜலட்சுமி பேசுகையில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும் என்பதால் நீர், நிலம் நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் மாசுபடாமல் இருந்தால் தான் மனிதர்களும் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ முடியும். இதனை இளைய தலைமுறைக்கு வலியுறுத்தும் வகையில் நடந்த பூஜை தான் கங்கா வந்தனம் மற்றும் பூமி வந்தனம் பூஜையாகும் என குறிப்பிட்டார்.
அலைமோதிய கூட்டம்
கண்காட்சியில் ஆன்மிக அரங்குகளுடன் சமுதாய சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை விவேகானந்த ஆசிரமம் சார்பில் சமயம் சார்ந்த நல்கருத்துகளை சமய வகுப்புகள் மூலம் மாநிலம் முழுவதும் போதித்து வருவதை பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மூலம் விழிப்புணர்வு அளிக்கும் அரங்கு மற்றும் கிருஷ்ணர் பிறந்த இடம் உள்ளிட்ட பல அறிய ஆன்மிக தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள கிருஷ்ணவகை சமுதாயத்தினரின் அரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று மாலை குஜராத் மாநிலம் மற்றும் சவுராஸ்டிரா சமூகத்தினரின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் கண்காட்சி வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதியது.
மாணவர்களுக்கு பரிசு
சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு நம்முடைய பாரம்பரியத்துடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கண்காட்சி வளாகத்தில் இறுதி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாரத தாயை மற்றும் தாய் நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடிய வீரர்களை வணங்கும் பரம் வீர் வந்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 3.15 மணிக்கு குறும்பர் பழங்குடியினரின் பாரம்பரிய சடங்கு முறைகளும், வீரபாண்டிய கட்டபொம்மன் (ராஜ கம்பளத்தார் பயிர்) நாடகமும், இரவு 6 மணிக்கு நாட்டுப்பற்று சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.