சொத்து தகராறில் பயங்கரம்: காரை ஏற்றி தாய் படுகொலை

சொத்து தகராறில் தாய் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சொத்து தகராறில் பயங்கரம்: காரை ஏற்றி தாய் படுகொலை
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 62). இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38) என்று 3 மகன்கள் உள்ளனர்.

சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது.

கார் மோதியது

அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று காலையில் முருகம்மாள் தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அச்சன்புதூர்-சிவராம்பேட்டை சாலையில் சென்றபோது, அவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் முருகம்மாள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயமூர்த்தி பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

விபத்து அல்ல கொலை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உதயமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அது விபத்து இல்லை என்பதும், சொத்து தகராறில் முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகனே காரை ஏற்றி கொலை செய்த திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

காரணம் என்ன?

மோகன் சென்னையில் கட்டிடங்கள் கட்டுமானத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது சொந்த ஊரான அச்சன்புதூரில் இருந்து வந்தார். மோகனுக்கும், அவரது தாய் முருகம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு செங்கோட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது.

மேலும், சங்கரநாராயணன் விபத்து தொடர்பான வழக்கில் இன்சூரன்ஸ் தொகையை முருகம்மாள் மற்றும் அவரது 3 மகன்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த பணத்தை வழங்குவதிலும் மோகனுடன் பிரச்சினை இருந்து வருகிறது. மோகனுக்கு சொத்தும் கிடையாது, பணமும் கிடையாது என்று புறம்தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் முருகம்மாள், உதயமூர்த்தி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது காரை ஏற்றி உள்ளார். இதில் முருகம்மாள் உயிரிழந்தார்.

இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கொலையாளிக்கு வலைவீச்சு

இந்த பயங்கர கொலை குறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மோகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

சொத்து தகராறில் தாயை அவரது மகனே காரை ஏற்றி கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com