

சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் 13-ந் தேதி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டசபை அரங்கத்தில் அன்று காலை 10 மணிக்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
பொதுவாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி, சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், என்னென்ன அலுவல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு செய்யும்.
ஆனால் இந்த முறை சட்டசபை தொடங்குவதற்கு முன்பே அலுவல் ஆய்வுக்குழு கூட்டப்படுகிறது. அதன்படி, 10-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை இந்த கூட்டத்துக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.