ஜி.எஸ்.டி. வரி மாற்றத்துக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணம் குறைப்பு எவ்வளவு? புதிய கட்டண விவரம்

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுகிறது. ஜனவரி 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.
ஜி.எஸ்.டி. வரி மாற்றத்துக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணம் குறைப்பு எவ்வளவு? புதிய கட்டண விவரம்
Published on

சென்னை,

100 ரூபாய்க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகள் மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

அதுபோல 100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட் மீதான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார்.

ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் எவ்வளவு குறையும்? என்பது பற்றி தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ரூ.150 ஆக இருந்த முதல் வகுப்பு டிக்கெட் கட்டணத்தில் ரூ.15 குறைக்கப்படுகிறது. ரூ.120 ஆக இருந்த கட்டணத்தில் ரூ.12 குறைக்கப்படுகிறது. ரூ.100 மற்றும் அதற்கு கீழ் உள்ள டிக்கெட்டுகளுக்கு ரூ.6 குறைக்கப்படுகிறது. இவ்வாறு அபிராமி ராமநாதன் கூறினார்.

அதன்படி, சென்னை அபிராமி தியேட்டரில் ரூ.150 டிக்கெட் கட்டணம் ரூ.135 ஆக குறைக்கப்பட உள்ளது. ரூ.120 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.108 ஆக குறைக்கப்பட இருக்கிறது. ரூ.100 மற்றும் அதற்கு கீழ் உள்ள டிக்கெட் கட்டணம் ரூ.94 ஆக குறைக்கப்படும்.

சத்யம் சினிமாஸ், எஸ்கேப், பி.வி.ஆர்., ஐநாக்ஸ் போன்ற மால் தியேட்டர்களில் ரூ.180 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.165 ஆகவும், ரூ.170 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.158 ஆகவும், ரூ.63 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.57 ஆகவும் குறைக்கப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பிருந்தா தியேட்டரில் ரூ.160 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.130 ஆகவும், ரூ.150 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆகவும் குறைகிறது. கொளத்தூர் கங்கா தியேட்டரில் ரூ.160 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.130 ஆகவும், ரூ.150 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆகவும் குறைக்கப்பட இருக்கிறது.

தமிழகம் முழுவதும் இதேபோல் எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com