ஊராட்சி மன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.
ஊராட்சி மன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பணிகளில் கணவரையோ, உறவினரையோ அனுமதிக்கக்கூடாது என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற பெண் தலைவர்களின் பொறுப்புகளும், கடமைகளும் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 164 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பதவியில் இருந்து வருகின்றனர். இவர்களுக்கான பொறுப்புகளும், கடமைகளும் என்ன என்பதை தெரிந்து கிராம வளர்ச்சிக்கு ஒவ்வொரு பெண் தலைவர்களும் தங்களை ஈடுபடுத்தி பணியாற்ற வேண்டும்.

பெரும்பான்மையான இடங்களில் பெண் தலைவர்களின் உறவினர்களே நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கிராம ஊராட்சிகளில் பெண் தலைவர்கள் தான் அனைத்து வகையான வளர்ச்சி திட்டங்களிலும் பணியாற்ற வேண்டும். உங்களுடைய கணவரோ, உறவினரோ இருக்கக்கூடாது.

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு

தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால், உங்கள் ஊரில் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றான குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு அனைவரும் முன்வந்து செயலாற்ற வேண்டும். குப்பைகளை ஒவ்வொரு வீட்டிலும் தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் முறையாக பராமரிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பெரும்பான்மையான ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை கிடங்குகளை பயன்படுத்தப்படாமல் தெருவோரங்களில் அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டி எரித்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஊராட்சி மன்ற தலைவர்கள் இதை கவனிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

குழந்தை திருமணத்தை தடுக்கவும்

வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் 'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு தொகை பல்வேறு ஊராட்சிகளில் இன்னும் நிலுவையில் உள்ளது. அதை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சியின் வருவாயை பெருக்க வரிவசூல் பணிகளை அதிகரிக்க வேண்டும்.

மாதந்தோறும் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட பொருளில் வரவு-செலவு விவரங்கள் இடம்பெற வேண்டும். கிராம ஊராட்சியில் காய்ச்சல் ஏற்படுபவர்கள் குறித்த விவரங்களை அறிந்து அவர்கள் முறையாக சிகிச்சை பெறுகின்றனரா? என்பதை கவனிக்க வேண்டும்.

குழந்தை திருமணம் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவித்து திருமணத்தை தடுத்து குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.

கிராமத்தில் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், தெருவிளக்கு, சுகாதாரம் இவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கின்றதா? என்பதை ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிந்து உங்களின் கிராம வளர்ச்சிக்கு சுதந்திரமாக செயல்படுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com