‘கோடநாடு எஸ்டேட்டை மீட்க சட்டரீதியாக போராடுவேன்’ முன்னாள் உரிமையாளர் பேட்டி

‘கோடநாடு எஸ்டேட்டை மீட்க சட்டரீதியாக போராடுவேன்’ என்று அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறினார்.
‘கோடநாடு எஸ்டேட்டை மீட்க சட்டரீதியாக போராடுவேன்’ முன்னாள் உரிமையாளர் பேட்டி
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 9-ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதன் பின்னர் அதன் அருகில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் குன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கிலாந்தை சேர்ந்த நானும் எனது குடும்பத்தினரும் எனது தந்தை கிரேக் ஜோனுடன் இங்கு வந்தோம். கடந்த 1975-ம் ஆண்டு ரூ.33 லட்சத்துக்கு கோடநாடு எஸ்டேட்டை விலைக்கு வாங்கினோம். சிறிது காலத்திலேயே 50 ஏக்கர் எஸ்டேட்டை விற்று விட்டோம். 900 ஏக்கர் மட்டுமே எங்களிடம் இருந்தது. இந்த நிலையில் எஸ்டேட் வர்த்தகம் தொடர்பாக எங்களுக்கு கடன் ஏற்பட்டது. இதனால் எஸ்டேட்டை விற்க முயற்சி செய்தோம்.

இதை அறிந்த சசிகலா மற்றும் ராமசாமி உடையார் உள்பட அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் எங்களை அணுகினார்கள். நான் அவர்களுக்கு எஸ்டேட்டை விற்க மனமில்லை என்று கூறினேன். இந்த எஸ்டேட்டில் 30 பேர் பங்குதாரர்களாக இருந்தோம். இருப்பினும் அவர்கள் எஸ்டேட்டை கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். அப்போது நான், பெங்களூருவில் இருந்ததால், அங்குள்ள போலீசில் புகார் செய்தேன்.

பின்னர் ராமசாமி உடையார் மூலம் என்னிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். அப்போது அவர்களுடன் சில அரசு அதிகாரிகளும் இருந்தனர். நான் எஸ்டேட்டை ரூ.9 கோடியே 50 லட்சத்துக்கு விற்பதாக தெரிவித்தேன். ஆனால் அவர்கள் ரூ.7 கோடியே 50 லட்சம் கொடுப்பதாகவும், வங்கி கடனை அடைப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் எஸ்டேட்டை அவர்களிடம் விற்றேன். தொடர்ந்து அவர்கள் பேசியபடி பணத்தை தரவில்லை. 50 சதவீத பணத்தை மட்டுமே கொடுத்தனர். வங்கியிலும் கடனை அடைக்கவில்லை.

இதையடுத்து நான் குடும்பத்தினருடன் கர்நாடகத்தில் உள்ள கூர்க் பகுதிக்கு சென்று குடியேறி விட்டேன். கடந்த 2008-ம் ஆண்டு எனது தந்தை இறந்து விட்டார். முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வருமான வரித்துறையினர் எஸ்டேட்டில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதைவைத்து எங்களது சொத்தை, அதாவது கோடநாடு எஸ்டேட்டை சட்டரீதியாக மீட்க போராடுவேன். மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com