

சென்னை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆறு கரை புரண்டு ஓடி வரும்போது அதன் வேகத்தை குறைப்பதற்காக திருச்சி முக்கொம்பில் வாத்தலை பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கி.பி. 1836-ம் ஆண்டு ஆர்தர் கார்ட்டர் என்ற பொறியாளரால் அணை கட்டப்பட்டது.
630 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் உள்ள 45 மதகுகளின் வழியாகத்தான் வெள்ள காலங்களில் காவிரியில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அணைக்கட்டுடன் கூடிய பாலத்தின் அகலம் 3 மீட்டர் ஆகும். இதற்கு முக்கொம்பு கொள்ளிடம் அணை என பெயர்.
அணைக்கட்டில் உள்ள பாலத்தின் வழியாக கார்கள் மற்றும் வேன்கள் செல்ல முடியும். திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் சாலையை அடைவதற்கு இந்த பாலத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
182 ஆண்டுகள் பழமையான மேலணையும் கல்லணையைப் போலவே பொறியியல் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. சுமார் 2.70 லட்சம் கன அடி நீர் செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த மேலணையில் 45 மதகுகள், தூண்கள் உள்ளன. அதிசயமாக பார்க்கப்படும் இந்த அணைகள் நேற்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு மேல் திடீரென 6-லிருந்து 13 வரையிலான 8 மதகுகள் அதனோடு சேர்ந்த தூண்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அனைத்துத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே இன்று காலை மேலும் ஒரு மதகு உடைந்ததை அடுத்து இதுவரை 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
இந்நிலையில், நாளை முக்கொம்பு மேலணையை பார்வையிட நாளை வெள்ளிக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.