

சென்னை,
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய 2 கட்சிகள் தொடருகின்றன. இன்னும் கூட்டணி அமைக்கவில்லை. இதனால் ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தோழமை கட்சிகளே என்று தெரிவித்திருந்தார். துரைமுருகனின் இந்த கருத்து தி.மு.க. கூட்டணி விவகாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறதா? என்பதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதற்கிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய அவர், தி.மு.க. உடனான விடுதலை சிறுத்தைகள் உறவு வலிமையாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், கூட்டணி பற்றி தான் தெரிவித்த கருத்து சரியானது தான் என்பதை விளக்கி துரைமுருகன் கூறியதாவது:-
பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு கட்சிகள் எங்களுடன் வந்து ஒன்று சேர்ந்துள்ளன. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மணமகளாகவும், மணமகனாகவும் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இன்னமும் கணவன்-மனைவி ஆகவில்லை. இன்னமும் திருமணம் நடக்காததால் திருமணபந்தம் ஏற்படவில்லை. தி.மு.க.வுடன் பல கட்சிகள் நல்ல நட்புடன் உள்ளன.
அந்த தோழமை கட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் நான் எதிரானவன் அல்ல. ஆனால் எனது அரசியல் அனுபவத்தில் கூட்டணி என்பது, ஒரு கட்சியானது தொகுதி பங்கீடு செய்து அதற்கான உடன்பாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்து போட்டால் மட்டுமே கூட்டணி கட்சி என்று சொல்லிக் கொள்ளமுடியும். கடந்த காலங்களில் தொகுதி பங்கீட்டில் அதிருப்தியும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டு பல கட்சிகள் பிரிந்து சென்றதை நினைவில் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.